வெள்ளி, ஜூலை 06, 2012

சிங்கள வீரர்களை திருப்பி அனுப்புவதில் மத்திய அரசுக்கு திடீர் சிக்கல்.


தாம்பரம் விமானப்படை தளத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,மத்திய அரசு தரப்பில் இது தொடர்பாக தொடர்ந்து மவுனம் காக்கப்படுகிறது. தாம்பரம் விமானப்படை தளத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் மட்டுமல்லாது திமுக தலைவர் கருணாநிதி,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, இலங்கை வீரர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,மதிமுகவினர் நேற்று தாம்பரம் விமானப்படை தளம் அருகே முற்றுகை போராட்டம் நடத்தினர்.அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளபோதிலும்,மத்திய அரசு இது விஷ்யத்தில் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. மேலும் சார்க் நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்த அடிப்படையிலேயே இலங்கை வீரர்கள் 9 பேர் ஒன்பது மாத காலத்திற்கு பயிற்சி பெறுவதற்காக இங்கு வந்துள்ளனர்.அத்துடன் அவர்கள் மட்டுமல்லாது சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள இதர நாடுகளை சேர்ந்த வீரர்களும் இந்த பயிற்சிக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதால் இலங்கை வீரர்களை மட்டும் திருப்பி அனுப்புவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை வீரர்களை திருப்பி அனுப்பினால்,மற்ற நாடுகளில் இருந்து வந்த வீரர்களுக்கு மட்டும் பயிற்சி அளித்தால் பிரச்னை வரும் என்று கூறப்ப்டுகிறது. ஆனால் இலங்கை வீரர்களை திருப்பி அனுப்பாவிட்டால்,தாம்பர விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மேலும் பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று எச்சரித்துள்ளன. ஆனால் மத்திய அரசு தரப்பில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவிலலை. அதே சமயம் தாம்பர விமானப்படை தளத்தை சுற்றி முன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக