வியாழன், ஆகஸ்ட் 23, 2012

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எஸ்.எம்.எஸ். தடையால் ரூ.300 கோடி இழப்பு


இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த மாதம் இருதரப்புக்கு இடையே கலவரம் மூண்டது. கலவரத்துக்கு இதுவரை 82 பேர் பலியாகி உள்ளனர். கலவரம் கட்டுக்குள் அடங்காமல் போனதற்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமும், இங்குள்ள விஷமிகள் சிலரும் எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்.களே காரணம். நிலநடுக்கம் பாதிப்பையும், புயல் பாதிப்பையும் இணைத்து, கிராபிக்ஸ் மூலம் அசாம் கலவர பாதிப்புபோல் சித்தரித்து அனுப்பப்பட்ட காட்சிகள், நெருப்பை பரவச் செய்தது. இதையடுத்து ஒட்டுமொத்தமாக எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். அனுப்ப மத்திய அரசு தடைவிதித்தது. ஒரு நாளைக்கு 5 எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்.கள் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் மற்றும் ஓணம் பண்டிகை சமயத்தில் இந்த தடைவிதிக்கப்பட்டதால், டெலிகாம் நிறுவன வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட ரம்ஜான் பண்டிகையின்போது வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள முடியாமல் தவித்தனர். இதனால் மாற்றுவழியை பின்பற்றி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இ-மெயில், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நவீன உபகரணங்கள் வாயிலாக வாழ்த்து மற்றும் தகவல் பரிமாற்றங்கள் நடந்தன. மத்திய அரசு விதித்துள்ள தடை, அடுத்த மாதம் வரை நடைமுறையில் இருக்கும். இதனால் ஓணம் பண்டிகையின்போதும் எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மூலம் அதிகம் பேரிடம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள முடியாது. இந்நிலையில் ஒட்டு மொத்த எஸ்.எம்.எஸ். அனுப்ப தடைவிதிக்கப்பட்டதில் இருந்து இதுவரை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அரசுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஒட்டுமொத்த எஸ்.எம்.எஸ்.அனுப்புவதற்கான தடையை, பதட்டமான மாநிலங்களுக்கு மட்டும் அமல்படுத்தலாம். இதனால் மற்ற மாநில வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். இதற்கு முன்பு, ஒட்டு மொத்த எஸ்.எம்.எஸ். அனுப்ப, காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதுபோன்ற நடவடிக்கையை தற்போதும் மேற்கொள்ளவேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக