செவ்வாய், அக்டோபர் 16, 2012

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு ஏர் ஏசியா கூடுதல் விமான சேவை


திருச்சி, : திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவையை ஏர் ஏசியா விமான நிறுவனம் நேற்று முதல் துவக்கியது. திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு இந்திய அரசின் அரசு நிறுவனமான ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முதன் முதலாக விமான போக்குவரத்தை துவக்கியது. அதன் பின்னர் மலேசியா நிறுவனமான ஏர்-ஏசியாவும் திருச்சி-மலேசியா இடையே போக்குவரத்தை துவக்கியது. இரு விமான நிறுவனங்களும் தினசரி தலா இரு டிரிப்புகளை இயக்கின. திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாட்டு பயணிகள் கூட்டம் அதிகளவில் வந்து செல்வதால், இந்த போக்குவரத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. நிர்வாக கோளாறு காரணமாக ஏர் இந்தியா நிறுவனமும் படிப்படியாக விமானப் போக்குவரத்தை குறைத்து, பின்னர் முற்றிலுமாக ரத்து செய்து விட்டது. அதன்பின் ஏர்- ஏசியா நிறுவனம் ஒரு சர்வீசை ரத்து செய்தது. இதனால் மலேசியா செல்ல பயணிகள் சிரமப்பட்டனர். டிக்கெட் கட்டணமும் பலமடங்கு எகிறியது. இந்நிலையில் ஏர்-ஏசியா விமான நிறுவனம் மலேசியாவுக்கு கூடுதல் விமானங்களை மீண்டும் இயக்க திட்டமிட்டது. அக்டோபர் 15ம் தேதி முதல் கூடுதல் போக்குவரத்து துவங்கும் எனவும் அறிவித்திருந் தது. அதன்படி நேற்று முதல் கூடுதல் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. முதல் டிரிப் பில் மலேசியாவிலிருந்து 140 பயணிகள் திருச்சி வந்தனர். திருச்சியிலிருந்து 120 பேர் மலேசியா சென்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா நிலைய மேலாளர் டேவிட் தலைமையில் ஊழியர்கள் பயணிகளை வரவேற்றனர். வார நாட்களில் திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இந்த விமானம் பிற்பகல் 4 மணிக்கு திருச்சி வந்து 4.30க்கு மீண்டும் மலேசியா (கோலாலம்பூர்) புறப்பட்டுச் செல்லும். பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு திருச்சி-மலேசியா இடையே விமான டிக்கெட்டுகள் கிடைக்காத காரணத்தினால், திருச்சி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பயணிகள் பலரும் சிங்கப்பூர் சென்று திருச்சி வந்தனர். அல்லது மலேசியாவிலிருந்து சென்னை சென்று அதன்பின் திருச்சிக்கு சாலை அல்லது ரயில் மார்க்கமாக வந்து சென்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் ஏர் ஏசியா நிறுவனம் கூடுதல் சேவையை திருச்சிக்கு வழங்கியிருப்பது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல சிங்கப்பூர் திருச்சி இடையே டைகர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களும் கூடுதல் போக்குவரத்தை விரைவில் துவக்கவுள்ளன. இதன் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை விகிதம் மீண்டும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக