வெள்ளி, நவம்பர் 02, 2012

தரைதட்டிய கப்பல்: ஹெலிகாப்டரில் மீட்பு நடவடிக்கை


சென்னை, நவ.2 - வங்கக் கடலில் உருவான `நீலம்' புயல் நேற்று முன்தினம் மாலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை நெருங்கிய போது காற்றின் வேகம் பலமாக இருந்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை துறைமுகம் வந்த கப்பல்கள் ஆங்காங்கே நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது. மொத்தம் 23 கப்பல்கள் நின்றிருந்தன. மும்பையில் இருந்து விசாகபட்டினம் துறைமுகம் செல்லும் எம்.டி. `பிரதீபா காவேரி' என்ற எண்ணை கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்தது. புயலுக்கு முன்பே வந்த இந்த கப்பல் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி தர வேண்டி இருந்ததால் சென்னையில் இருந்து புறப்படாமல் நின்றிருந்தது. இந்த நிலையில் `நீலம்' புயல் உருவானதால் துறைமுகத்தின் வெளியே பெசன்ட் நகர் கடற்கரை அருகே நின்றிருந்தது. நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி அளவில் திடீரென்று சூறாவளி காற்று பலமாக வீசியதால் `பிரதீபா காவேரி' கப்பல் நகர்ந்து தரை தட்டியது. இதனால் கப்பல் கடல் சீற்றத்தில் அடித்துச் செல்லப்பட்டு தள்ளாடிய படியே 5 கி.மீ. தூரம் சென்று பட்டினப்பாக்கம் தாண்டி கலங்கரை விளக்கத்தின் அருகே நின்றது. அப்போது கப்பலில் 37 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 21 பேர் உயிர் தப்புவதற்காக கப்பலில் இருந்த 3 சிறிய படகுகள் மூலம் கரைக்கு செல்ல முயன்றனர். அவர்கள் 'லைப் ஜாக்கெட்' என்ற உயிர் காக்கும் நீச்சல் உடையும் அணிந்து இருந்தனர். ஆனால் கடல் சீற்றம் மற்றும் கடல் அலை 1 மீட்டர் தூரம் எழுந்ததால் படகுகள் தத்தளித்தது. எதிர்பாராத விதமாக 2 படகுகள் கவிழ்ந்துவிட்டன. அதில் இருந்து கப்பல் ஊழியர்கள் `லைப் ஜாக்கெட்' உதவியுடன் கடலில் நீந்தியவாறு தத்தளித்தனர். இதை கரையில் நின்று வேடிக்கை பார்த்த மீனவர்கள் துணிச்சலுடன் படகுகளில் சென்று 16 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களில் புதுச்சேரியைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஆனந்த் மோகன் தாஸ் மயங்கிய நிலையில் இருந்தார். அவரையும் மற்ற 15 பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆனந்த் மோகன்தாஸ் இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரை ஒதுங்கிய கப்பலில் கேப்டன் உள்பட 15 பேர் கப்பலிலேயே இருந்தனர். இரவில் கடல் சீற்றம் மற்றும் கொந்தளிப்பாக காணப்பட்டதாலும் மழை பெய்ததாலும் அவர்களை மீட்க முடியவில்லை. இதனால் அவர்கள் உயிரை கையில் பிடித்தபடி கப்பலிலேயே விடிய விடிய தவித்தனர். அதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு கடலோர காவல் படை ஹெலிகாப்டரில் மீட்பு படையினர் ஐ.ஜி. சைலேந்திரபாபு தலைமையில் சென்று கப்பலில் தவித்த கேப்டன் உள்பட 15 பேரையும் மீட்டனர். அவர்களை ஹெலிகாப்டரில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வேன்களில் 15 பேருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அடையாறு தனியார் ஆஸ் பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே கப்பல் தரை தட்டி கரை ஒதுங்கியதும் படகுகளில் உயிர் தப்ப முயன்ற 21 பேரில் 15 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். மீதி 5 பேர் மாயமாகிவிட்டனர் என்று தெரிய வந்தது. அவர்கள் பெயர் ராஜ்கமித்கர், ருசத் ஜாதவ், நிரஞ்சன், கிருஷ்ணாகுரில், ஜோமன் ஜோசப். இவர்கள் அனைவரும் படகு கவிழ்ந்தபோது கடல் சீற்றத்தில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்கள். அவர்கள் 'லைப் ஜாக்கெட்' அணிந்து இருந்ததால் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். மாயமான 5 பேரையும் முதலில் படகில் சென்று தேடினார்கள். ஆனால் கடல் சீற்றம் தணியாததால் படகில் தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலையில் கடலோர காவல் படை ஹெலிகாப்டரில் சென்று 5 ஊழியர்களையும் கடலில் தேடி வருகிறார்கள். சிறிய படகில் அதிகம் பேர் தப்ப முயன்றதால் கவிழ்ந்தது: கூடுதல் டி.ஜி.பி சைலேந்திரபாபு தகவல் மெரீனாவில் தரை தட்டிய கப்பல் ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:​ கப்பல் தரை தட்டி நின்றதும் அது இன்னும் சிறிது தூரம் தள்ளிச் சென்று கரை ஒதுங்கினால் ஆபத்து என்று கப்பல் கேப்டன் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கப்பல் ஊழியர்கள் 36 பேரும் உயிருக்கு பயந்து தப்ப முயற்சி செய்து இருக்கிறார்கள். கப்பலில் ஆபத்து காலத்தில் உயிர் தப்ப 2 படகு இருந்தது. அதில் அனைவரும் செல்ல முடியாது என்பதால் ஒரு படகில் 15 பேரும், மற்றொரு படகில் 16 பேரும் ஏறி இருக்கிறார்கள். படகில் அவர்கள் அமர்ந்து இருந்த நிலையில் கிரேன் மூலம் கடலில் இறக்கப்பட்டது. படகுகள் தரையை நோக்கி வரும் போது கடல் சீற்றம் காரணமாகவும், ஒரே படகில் அதிகம் பேர் ஏறியதாலும் தாங்க முடியாமல் கவிழ்ந்து விட்டது. கடலில் தத்தளித்த 16 பேரும் அபயக்குரல் எழுப்பினர். கரையில் இருந்து பார்த்து கொண்டு இருந்த மீனவர்கள் உயிரை பணயம் வைத்து அவர்களை காப்பாற்றி இருக்கிறார்கள். மேலும் 5 பேரை காணவில்லை. அவர்கள் லைப் ஜாக்கெட் அணிந்து இருப்பதால் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது. வட தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் அவர்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்களா? என்று தேடி வருகிறோம். மீனவ கிராமங்களும், கடலோர காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். தொடர்ந்து 5 பேரையும் தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். நீலம் புயல் கரையை கடப்பதால் சரக்கு கப்பல்களை நடுக்கடலுக்கு செல்லுமாறு துறைமுக அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் பிரதீபா காலோறு கப்பல் நடுக்கடலுக்கு செல்ல முயன்றபோதுதான் கடல் சீற்றம் காரணமாக கரைக்கு இழுத்து வரப்பட்டதாக ஒரு தகவலும், கப்பலில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் கப்பலை நடுக்கடலுக்கு செலுத்த முடியவில்லை என்று மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. இதுபற்றி முழு விசாரணைக்கு கப்பல் போக்குவரத்து இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 174 மீட்டர் ளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பலில் சுமார் 8 ஆயிரம் டன் எண்ணை பொருட்களை ஏற்றிச் செல்லலாம். இந்த கப்பல் 1981​ல் ஜப்பானில் கட்டப்பட்டது. தற்போது 31 ஆண்டுகளைக் கடந்துவிட்டதால் இதன் இயந்திரங்கள் அபாய நிலையை சமாளிக்கும் திறன் இழந்து விட்டதா? என்பது குறித்தும், கப்பலை அப்படியே பத்திரமாக இழுக்க முடியுமா? அல்லது உடைத்துத்தான் எடுக்க வேண்டுமா? என்பது குறித்தும் ஆய்விற்கு பிறகே கூற முடியும் என கடல்சார் வாணிபத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2011​ம் ஆண்டு டிசம்பரில் தமிழகத்தை தானே புயல் தாக்கியபோது தென்கொரியா நாட்டைச் சேர்ந்த ஓ.எஸ்.எம். அரேனா என்ற கப்பல் மெரினா கடற்கரை அருகே கரை ஒதுங்கியது. ஆனால் உடனடியாக இழுவைக் கப்பல்கள் மூலம் அந்த கப்பல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக