சனி, டிசம்பர் 22, 2012

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை! - முதல்வருக்கு அமீர் கோரிக்கை


தூத்துக்குடி அருகே 13 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற கொடியவர்களுக்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தூக்கு தண்டனை வழங்குங்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை: தலைநகர் டெல்லியில் கடந்த 16-ம் தேதி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒவ்வொரு இந்தியனின் இதயத்தையும் உலுக்கு உறைய வைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த கொடிய செயலில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளுக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அதனை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்ப வேண்டும். இது இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு ஒரு அபாய எச்சரிக்கையாக அமையும். இதுபோன்ற கேவலமான குற்றச் செயல்களில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது தலைநகர் டெல்லி என்பது 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப் பெரிய தலைகுனிவு மட்டுமல்ல, அவமானமும் கூட என்பது நிதர்சன உண்மை. இந்த கொடிய நிகழ்ச்சி நம் நெஞ்சை விட்டு மறைவதற்குள், நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தில் 7-ம் வகுப்பு படித்த மாணவி புனிதா மிகக் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதாக வந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, இக்கொடிய செயலைச் செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தூக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும். இதன் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவி சம்பவத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கும் டெல்லி அரசுக்கு தமிழக முதல்வர் வழிகாட்டி இந்தியாவுக்கே உதாரணமாகத் திகழவேண்டும்," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக