சனி, ஏப்ரல் 27, 2013

முஸ்லிம்களுக்கு கடன் அளிக்க மறுக்கும் பொதுத்துறை வங்கிகள்! சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு


முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விக் கடன்கள் மற்றும் சலுகைகளை வழங்க பொதுத் துறை வங்கிகள் மறுப்பதாக தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவித்தனர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது உறுப்பினர்கள் இந்த புகாரை தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.லாசர் பேசும்போது; “கல்விக் கடன், தொழில் மற்றும் வியாபாரம் துவங்குவதற்கு இஸ்லாமியர்கள் கடன் கேட்டால் வங்கிகள் புறக்கணிக்கின்றன. உதாரணத்திற்கு சென்னை நகரத்தில் இருக்கின்ற வங்கிகள் இஸ்லாமியர்களுக்கு வழங்கியிருக்கக் கூடிய கடன்களை கணக்கெடுத்தாலே எந்தளவுக்கு கல்விக்காக, தொழிலுக்காக கடன் வழங்கியுள்ளார் என்ற விபரம் தெரியவரும். எனவே தமிழக அரசு தலையிட்டு அந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் முஹம்மது ஜான்; “பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் சிறு வணிக கடன், தனி நபர் கடன், கல்விக் கடன் வழங்கப்படுகிறது. தொழிற்கடனுக்கு மத்திய அரசின் தேசிய சிறுபான்மை வளர்ச்சி அமைப்பு வழங்கும் நிதிக்கு மாநில அரசு பொறுப்பேற்று ரூ.50 கோடி வரை பெற்று சிறுபான்மையினருக்கு வழங்கி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலபாரதி பேசும்போது; “மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் இஸ்லாமியர் மாணவர்களுக்கு கல்விக் கடனை வழங்குவதில்லை. இஸ்லாமியர்களிடம் துவேசம் காட்டுகிறது. இதற்காக திண்டுக்கல்லில் போராடியும் பயனில்லை. எனவே, சிறுபான்மையினருக்கு மத்திய அரசின் வங்கிகளில் கடன் உதவி கிடைப்பதை உத்தரவாதப்படுத்த மாநில அரசு தலையிட வேண்டும்.” என்றார் இதற்கு அமைச்சர் முஹம்மது ஜான்; “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் மாணவர்களுக்கு கடன் உதவி வழங்குவதை உத்தரவாதப்படுத்த, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார். மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா பேசும்போது; “டாம்கோ சிறப்பான முறையில் கடன் வழங்குகிறது. டாம்கோ நிறுவனம் தாய்கோ மூலம் கடன் வழங்குகிறது. தாய்கோ நிறுவனம், ஆட்டோ லோன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறது. சங்கங்களுக்கு கடன் கொடுக்கவும் தயங்குகிறது. மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டபடி, மத்திய அரசின் கீழ் உள்ள வங்கிகள், குறிப்பாக மாணவர்களுக்கு உதவித் தொகைகளை வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. அந்த வங்கிகளுக்கு மாநில அரசு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.” என்றார். www.niudrin.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக