செவ்வாய், ஏப்ரல் 30, 2013

கூனிமேடு வன்முறை! இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேரில் ஆறுதல்!


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்ட கும்பல், கூனிமேடு பகுதியிலும் தனது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. வன்முறையில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை நேற்று அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் ஏற்ப்பட்ட கலவரத்தை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை மூடப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டன. இதனால் மாநாட்டிற்கு வாகனங்களில் சென்ற இளைஞர்கள் போகும் வழியெல்லாம் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி பெரும் வன்முறையை நிகழ்த்தி கொண்டே சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் போது கூனிமேட்டில் இறங்கிய வன்முறையாளர்கள் கடைகளை அடித்து நொறுக்கியும், பெண்களை பார்த்து ஆபாசமாக பேசி மோசமாக நடந்துள்ளனர். மேலும் அங்கு சாலையோரத்தில் உள்ள பள்ளிவாசலின் மீது பீர் பாட்டில்களையும், கற்களையும் கொண்டு வீசி தாக்கியுள்ளனர். கடைத்தெருவில் நின்றுகொண்டிருந்தவர்களை கட்டையால் அடித்துள்ளனர். இருசக்கர மோட்டார் வாகனம் மற்றும் கறிகடை ஒன்றையும் எரித்துள்ளனர். 40க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் வந்த அந்த கும்பல் சுமார் அரைமணி நேரம் இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட கூனிமேடு மற்றும் மண்டவாய் குப்பம் ஆகிய பகுதிகளை தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேற்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஹனீபா, எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முபாரக், தமுமுகவின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, ஐஎன்டிஜே முனீர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் ஃபரூக், தர்வேஸ் ரஷாதி உள்ளிட்ட தலைவர்கள் மக்களை சந்தித்தனர். WWW.NIDURIN.COM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக