புதன், ஏப்ரல் 03, 2013

தாயுடன் மொபட்டில் சென்றபோது தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவி பலி


வேளச்சேரி : கல்லூரி பஸ்சை தவறவிட்டதால், தாயுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்த இன்ஜினியரிங் மாணவி, லாரி மோதி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும், மாணவர்களும் மறியலில் ஈடுபட்டனர். மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில் ரவி. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களது ஒரே மகள் சுகன்யா (19). தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். நேற்று காலை கல்லூரி பஸ்சை தவற விட்டார். இதனால் சுகன்யாவை அவரது தாய் லட்சுமி, மொபட்டில் கல்லூரிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். மேடவாக்கம் , மாம்பாக்கம் மெயின் ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது. இதற்காக ஜல்லிக் கற்களை சாலையோரம் கொட்டியுள்ளனர். அப்பகுதியில் சித்தாலப்பாக்கம் அருகே வந்தபோது லட்சுமியின் மொபட், ஜல்லிக் கற்களில் ஏறியதில் நிலைதடுமாறியது. இதில் மொபட் சரிந்து லட்சுமி சாலையோரமும், சுகன்யா சாலையின் நடுவிலும் விழுந்தனர். அப்போது, பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி சுகன்யா மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். காயமின்றி தப்பிய லட்சுமி, தன் கண்ணெதிரிலேயே மகள் இறந்ததை பார்த்து கதறி அழுதார். விபத்து நடந்ததை அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் டிரைவர், தண்ணீர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு கீழே குதித்து தப்பியோடினார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவ்வழியே வந்த 2 லாரிகளை சிறைபிடித்தனர். சிறிது நேரத்தில் தகவலறிந்து மாணவர்களும் அங்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். பின்னர் சுகன்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதல்நாளே லீவு போட விரும்பாமல் சென்றார் தாய் லட்சுமி கூறுகையில், சுகன்யா எங்களுக்கு ஒரே மகள், நன்றாக படிப்பாள். பிளஸ் 2 வரை மடிப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தாள். அந்த பள்ளி நிர்வாகம் நடத்திய இன்ஜினியரிங் கல்லூரியில்தான் முதலாண்டு சேர்ந்து படித்து வந்தாள். வீட்டில் இரண்டு கார்கள் உண்டு. இருந்தாலும் கல்லூரி பஸ்சிலேயே தோழிகளுடன் சென்று வருவாள். இன்று கல்லூரி பஸ்சை தவறவிட்டு விட்டாள். நீண்டநாள் விடுமுறைக்கு பிறகு கல்லூரி தொடங்குவதால் முதல்நாளே லீவு போடக்கூடாது என்று கூறினாள். அதனால் நான் மொபட்டில் அழைத்து சென்றேன். என் கண் முன்பே ஒரே மகள் இறந்து விட்டாளே என்று கூறி கதறி அழுதார். விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரி டிரைவர் மதுரையை சேர்ந்த மதி (25) கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக