வியாழன், ஏப்ரல் 04, 2013

காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற கல்லூரி மாணவன் பிடிபட்டார்


சென்னை : காதலி தன்னை விட்டு வேறு ஒரு மாணவனை காதலித்ததால் ஆத்திரம் அடைந்த மற்றொரு மாணவன் துப்பாக்கியால் இருவரையும் சுட்டு கொல்ல முயன்றான். துப்பாக்கியை இயக்க தெரியாததால் தலையில் ஓங்கி அடித்து விட்டு ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் மதுரவாயலில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆதித்யா காயி (22). மதுரவாயலில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் இறுதி ஆண்டு படிக்கிறார். இவருடன் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஹேமந்தி தாஸ் (22) படிக்கிறார். நண்பர்களாக பழகிய இருவரும் காதலிக்க தொடங்கினர். பின்னர், மதுரவாயல் கம்பர் நகரில் வாடகைக்கு அறை எடுத்து ஒன்றாக தங்கினர். 6 மாதங்களுக்கு முன்பு திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதே கல்லூரியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மணீஸ் குமார் (23) என்பவரும் பிடெக் இறுதியாண்டு படித்தார். மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஹேமந்தி தாசுக்கு மணீஸ் குமார் ஆறுதல் கூறினார். பின்னர் மணீஸ் குமாரும் ஹேமந்தி தாசும் காதலிக்க தொடங்கினர். இதையறிந்த ஆதித்யா ஆத்திரம் அடைந்தார். இருவரையும் கண்டித்தார். இதை தொடர்ந்து ஆதித்யா அறையில் இருந்து ஹேமந்தி தாஸ் வெளியேற முடிவு செய்தார். இதை தெரிந்து கொண்ட ஆதித்யா, ஹேமந்தி தாசின் பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அவருக்கு தெரியாமல் எடுத்து வைத்துக் கொண்டார். இதற்கிடையில், ஆதித்யாவின் அனைத்து சான்றிதழ்களையும் ஹேமந்தி தாஸ் எடுத்து வைத்துள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அவரவர் சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது என ஹேமந்தி தாசும், ஆதித்யாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி, மதுரவாயல் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் அவரவர் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். சொன்னபடி ஹேமந்திதாஸ் மணீஸ் குமாருடன் பைக்கில் வந்தார். இது ஆதித்யா வுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த ஆதித்யா “எனது காதலியை நீ அபகரித்து விட்டாய். அவள் இல்லாமல் நான் தினமும் செத்து பிழைக்கிறேன். அவளை என்னிடம் திருப்பி கொடு‘‘ என்று கத்தியுள்ளார். பதிலுக்கு “நான் ஹேமந்தி தாசை கட்டாயப்படுத்தி என்னுடன் அழைத்து செல்லவில்லை. அவள் தான் என்னுடன் விரும்பி வந்தாள். நீ அவளை மறந்து விடுÕÕ என்று மணீஸ் குமார் கூறினார். இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற ஆதித்யா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட முயன்றார். துப்பாக்கியை எப்படி இயக்க வேண்டும் என்று தெரியாததால் அவரால் சுட முடியவில்லை. துப்பாக்கியை பார்த்ததும் ஹேமந்திதாசும், மணீஸ் குமாரும் பயத்தில் கூச்சலிட்டனர். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதனால், செய்வதறியாது தவித்த ஆதித்யா துப்பாக்கியால் இருவரது தலையிலும் ஓங்கி அடித்தார். இதில் அவர்கள் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. தப்ப முயன்ற ஆதித் யாவை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். காயம் அடைந்த மணீஸ், ஹேமந்திதாஸ் இருவரையும் சிகிச்சைக்காக திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சுட முயன்றது ஏன்: மாணவன் வாக்குமூலம் துப்பாக்கியால் சுட முயன்றது ஏன் என்று கைது செய்யப்பட்ட ஆதித்யா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: ஹேமந்தி தாசை உயிருக்கு உயிராக காதலித்தேன். படிப்பு முடிந்த உடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம். என் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் வில்லன் போல் மணீஸ் குமார் வந்தார். அவரை பழி வாங்க திட்டமிட்டேன். சில வாரங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு சென்றேன். அங்கு ஸீ 5 ஆயிரம் மதிப்பில் கள்ள துப்பாக்கி வாங்கி வந்தேன். ஓட்டல் அறைக்கு வந்த உடனேயே மணீஸ் குமாரை சுட்டு தள்ள முடிவு செய்தேன். சுட முயன்ற போது அதை எப்படி இயக்குவது என்று எனக்கு தெரியவில்லை. பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு படிக்க வருபவர்களில் பலர் தங்களது பாதுகாப்பிற்காக கள்ளத்துப்பாக்கி வாங்கி வருவது வழக்கம்தான். இவ்வாறு ஆதித்யா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். மீண்டும் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையில் கல்லூரி மாணவர்கள் துப்பாக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில ஆசாமிகள் 5 பேர் வேளச்சேரியில் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து துப்பாக்கியை வைத்து கடத்தல் செய்யும் சில சம்பவமும் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த துப்பாக்கி கலாசாரம் மீண்டும் தொடங்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக