வெள்ளி, ஜூன் 07, 2013

சவூதி: Viber க்கு தடை! - அடுத்தது What's up?

ரியாத்: சவூதி அரேபியாவில் திறன்பேசி (Smartphone) களில் தொலைபேசப் பயன்படுத்தப்படும் Viber எனப்படும் இணைய தள பயன்பாட்டுசெயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சவூதியின் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழிற்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் (CITC) வெளியிட்டுள்ள அறிவிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்டுப்பாட்டு விதிகளை வைபர் (Viber) சரிவரக் கடைப்பிடிக்காததையடுத்து புதன்கிழமை முதல் அதன் சேவை முடக்கப்படுவதாக தொ.தொ - த தொ.ஒ ஆணையம் கூறியுள்ளது. எங்கள் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்படாத மற்ற பயன்செயலிகள் மீதும் தடை ஏற்படுத்தப்படும் என்றும் தகவல் தொழிற்நுட்ப ஆணையம் கூறியுள்ளது. வைபர் எனப்படும் பயன்செயலி மூலம் இணையத்தினூடே தொலைபேசவோ, செய்திகள் அனுப்பவோ, கோப்புகளைப் பகிர்ந்துகொள்ளவோ இயன்றது குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபியாவில் தங்கள் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைபர் இணைய தளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஸ்கைப், வாட்ஸ் அப், வைபர் ஆகிய செயலிகள் கட்டுப்பாட்டு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கும் படி சவூதி தொலைத் தொடர்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது கூறத்தக்கது. சவூதியை அடுத்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலும் ஸ்கைப், வைபர் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன என்பதும், வாட்ஸ் அப் செயலி இன்னமும் பயன்பாட்டில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் செயலிகளுக்கான மூலத் தளங்களை (Servers) தங்கள் நாடுகளில் கண்காணிப்பு காரணத்திற்காக நிறுவ வேண்டும் என்பதே சவூதி மற்றும் ஏனைய அரபு நாடுகளின் கோரிக்கையாக இருந்துவந்துள்ளது. சவூதி அரேபியாவில் தற்போது 15.8 மில்லியன் இணையதள சந்தாதாரர்கள் உள்ளனர் என்றும், சராசரி அமெரிக்கர் உபயோகிப்பதினும் மும்மடங்கு அதிகமாக சவூதி அரேபியாவில் உள்ளோர் தங்கள் காணொளி தளத்தைப் பயன்படுத்துவதாகவும், காணொளிக் காட்சித் தளங்களின் அரசனான யூ ட்யூப் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக