ஞாயிறு, நவம்பர் 10, 2013

கிழக்கு ஜப்பானை மறுபடியும் தாக்கிய 5.5 ரிக்டர் நில நடுக்கம்:புக்குஷிமாவும் குலுங்கியது


ஞாயிற்றுக்கிழமை கிழக்கு ஜப்பானை 5.5 ரிக்டர் அளவுடைய மிதமான நிலநடுக்கம் காலை 7.37 am இற்குத் தாக்கியுள்ளது. இதனால் தலைநகர் டோக்கியோவில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதுடன் முன்னர் சுனாமி தாக்கிய ஃபுக்குஷிமா அணு உலைக்கு அண்மையிலும் அதிர்ச்சிகள் உணரப்பட்டதாகவும் ஆயினும் இதனால் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் குறித்த அணு உலையின் ஆப்பரேட்டர் தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கம் டோக்கியோவுக்கு வடக்கே 59 Km ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 30 செக்கன்கள் நீடித்த இந்த பூகம்பத்தை டோக்கியோவில் வசிக்கும் பல மக்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் டோக்கியோவிலும் அதற்கு அண்மையிலும் செல்லும் அதிவேக புல்லட் ரயில்களான ஷின்கான்சென் ரயில்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப் பட்டு தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளனவா என விரைவாக பரிசோதிக்கப் பட்டதன் பின் ரயில் சேவை உடனே வழமைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகின்றது. ஜப்பானில் இதற்கு முன் ஏற்பட்ட மிக வலிமையான நிலநடுக்கமாக 2011 ஆம் ஆண்டு மார்ச்சில் அதன் வடகிழக்கு கடற்கரையில் ஃபுக்குஷிமா அணு உலைக்கு அண்மையில் ஏற்பட்ட 9 ரிக்டர் அளவுடைய பூகம்பமும் அதனால் விளைந்த சுனாமியும் கருதப் படுகின்றது. ஜப்பானில் அணு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் மிக அதிக மக்களைப் (18 000) பலி கொண்ட இயற்கை அனர்த்தமாக இது கருதப் படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக