திங்கள், நவம்பர் 11, 2013

பிலிப்பைன்சில் புரட்டிப் போட்ட ‘ஹையான்’ புயல் இன்று வியட்நாமைத் தாக்கியது


ஹனாய்: பிலிப்பைன்ஸ் தீவை நிலை குலையச் செய்த ‘ஹையான்' புயல் இன்று காலை வியட்நாமைத் தாக்கியது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிலிப்பைன்சில் 7000-த்திற்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. வருடத்திற்கு 20 பெரும் புயல்களை சந்திக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மையப்பகுதியில் கடந்த 8ம் தேதியன்று ஹையான் புயல் சுமார் 315 கி.மீட்டர் வேகத்தில் தாக்கியது. புயலில் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 1200 பேர் பலியாகியுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், புயலில் சிக்கி 10 ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கலாமென அஞ்சப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்ட போதும் இவ்வளவு பேர் பலியானதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. மேலும், புயல் பாதித்த பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப் பட்டுள்ளதால் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைவதில் பெரும் சிக்கல் நிலவியுள்ளது. இதன் காரணமாகவே பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் எனச் சொல்லப் படுகிறது. தனது வரலாற்றிலேயே பிலிப்பைன்ஸ் சந்தித்திருக்கும் மிக மோசமான புயல் இதுவென கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸில் தனது கோர முகத்தைக் காட்டிய ஹையான் புயல் தற்போது தென்சீனக்கடல் வழியாக வியட்நாமை நோக்கி செல்வதாகவும் தொடர்ந்து சீனாவை தாக்கப்போவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சீனா ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வெளியிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், வியட்நாம் நாட்டையும் ஹையான் புயல் தாக்கியுள்ளது. இன்று அதிகாலையில், வடக்கு வியட்நாமில் 'ஹையான்' புயல் கரையைக் கடந்தது. இதனால், தலைநகர் ஹனோயில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றுடன் கன மழையும் பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 6 லட்சம் மக்கள் அபாயகரமான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புயல் குறித்து மிகவும் கால தாமதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தலைநகர் ஹனோய் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வியட்நாம் சேத விபரங்கள் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக