செவ்வாய், நவம்பர் 12, 2013

பிலிப்பைன்ஸ் டக்லோபான் நகரில் மீண்டும் புயல், மழை


பிலிப்பைன்ஸின் டக்லோபான் நகர் மீண்டும் கடும் புயற்காற்றுத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. கடந்த வாரம் வீசிய ஹையான் பெரும்புயலினால் தாக்கப்பட்டு கடும் சேதங்களை எதிர்கொண்ட அந்த நகர் மீண்டும் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இப்போது வீசியுள்ள கடும் புயல் மேலும் துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டக்லோபான் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்து, இடிபாடுகளுக்கு இடையே வாழ்ந்து வருகின்றனர். நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க இராணுவ விமானங்கள் அந்த நகரின் விமான நிலையத்துக்கு சென்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான அறிகுறிகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று அங்குள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார். அந்தப் பகுதியில் உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது என்றும், அவற்றை பெற்றுக்கொள்ள விரக்தியான நடவடிக்ககளில் மக்கள் ஈடுபடுகிறார்கள் எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார். உணவுகளை சேமித்து வைக்கும் கிடங்குகள், மளிகை கடைகள் ஆகியவற்றை கூட்டத்தினர் சூறையாடுகின்றனர் எனவும், மக்கள் ஆத்திரமடைய ஆரம்பித்துள்ளனர் எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உதவிகள் எப்போது வந்து சேரும் என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரியாத சூழலே அங்கு நிலவுகிறது. எனினும் உதவிப் பொருட்களை ஏற்றி டக்லோபான் நகருக்கு செல்லும் வாகனங்களுக்கு இப்போது துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக