வியாழன், ஜனவரி 19, 2012

புதிதாக 835 மருத்துவர்களை நியமிக்க முதல்வர் உத்தரவு

சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, சிறப்புப்படியாக மாதந்தோறும் 500 ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள், இளஞ்சிசு தீவிர சிகிச்சையகம் ஆகியவற்றில் தற்போது ஏற்பட்டுள்ள 835 மருத்துவர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏழை எளியவர்களுக்கு தரமான மருத்துவ சேவை தங்கு தடையின்றி கிடைக்கும் வண்ணம், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாலும், ஏற்கெனவே இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டதாலும், ஏற்கனவே ஒரு மருத்துவருடன் இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் மருத்துவர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டதாலும், பணி ஓய்வு, பதவி உயர்வு, பணி துறப்பு ஆகியவற்றின் காரணமாகவும், 

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள், இளஞ்சிசு தீவிர சிகிச்சையகம் ஆகியவற்றில் தற்போது ஏற்பட்டுள்ள 835 மருத்துவர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பட்டியல் பெறப்பட்டு, இந்த மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில், கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில், வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவ சேவை  வழங்கப்பட்டு வருகிறது. 

இதற்காக ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தனியாக மூன்று செவிலியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். 

தற்பொழுது அந்நிலையங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முதல் வருடத்தில் மாதம் ரூ.4,000/-ம் இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ.4,500/-ம், மூன்றாம் வருடத்தில் மாதம் ரூ.5,500/-ம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. 

ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாரத்தில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்குவதால் கிராமப்புற மக்கள் மருத்துவ சேவைக்காக அதிக அளவில் அரசு சுகாதார மையங்களையே நாடி வருகின்றனர். 

எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, அவர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, சிறப்புப்படியாக மாதந்தோறும் 500 ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  

மேற்கூறிய அரசின் நடவடிக்கைகளினால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்கப் பெறும் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக