வியாழன், ஜனவரி 19, 2012

இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி



 1/1 
புது டெல்லி, ஜன. - 19 - இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்வதை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  கிங்பிஷர் உள்ளிட்ட சில தனியார் விமான நிறுவனங்களின் நெருக்கடிக்கு பணிந்து அவர்களுக்கு உதவும் வகையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நடத்திய ஆலோசனைகளை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. விரைவில் இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி முடிவு செய்யவுள்ளது.  இந்த சந்திப்பின் போது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உடனடியாக ரூ. 150 கோடி வழங்கவும் பிரணாப் ஒப்புக் கொண்டார். பெரும் நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனம் தனது பைலட்டுகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பல மாத சம்பளத்தை நிலுவை வைத்துள்ளது. இதனால் பைலட்டுகள் வேலைக்கு வராமல் மொத்தமாக விடுமுறை எடுத்து வருவதால் விமானங்களை இயக்க முடியாமல் ஏர் இந்தியா தடுமாறி வருகிறது. நிலுவையில் உள்ள சம்பள தொகையில் ஒரு பகுதியையாவது உடனடியாக வழங்க முடிவு செய்துள்ள அஜீத்சிங், நிதியமைச்சகத்திடம் ரூ. 150 கோடியை கோரினார்.இதை வழங்க பிரணாப் ஒப்புக் கொண்டார்.  மேலும் வி.ஐ.பிக்களுக்காக இயக்கப்பட்ட விமானங்களுக்காகவும், வி.ஐ.பிக்களுக்கு இடம் ஒதுக்கியதற்காகவும், ஏர் இந்தியாவுக்கு பல்வேறு அமைச்சகங்கள் கட்டண பாக்கி வைத்துள்ளன. அந்த வகையில் ஏர் இந்தியாவுக்கு ரூ. 600 கோடியை இந்த அமைச்சகங்கள் தர வேண்டியதுள்ளது. இதையும் விரைவில் பெற மத்திய அமைச்சர்களுடன் பேசவும் அஜீத்சிங் முடிவு செய்துள்ளார். இப்போது இந்திய விமான நிறுவனங்களில் 49 சதவீத அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த விதியை திருத்தி வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இந்திய விமான நிறுவனங்களில் 49 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்வதை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  அதே போல் ஏர் இந்தியாவிலும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுமா என்று கேட்டதற்கு பதிலளித்த அஜீத்சிங், ஏர் இந்தியாவும், ஒரு நிறுவனம்தான். அதில் பணம் போட முதலில் யாராவது முன் வரட்டும். அப்போது அது குறித்து பரிசீலிப்போம் என்றார். மேலும் விற்பனை வரி சுமையில் இருந்து தப்ப வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விமான எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ள தனியார் விமான நிறுவனங்ள் அனுமதி கோரி வருவது குறித்து கேட்டதற்கு இதை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசின் செயலாளர்கள் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இது குறித்து அமைச்சரவையில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார். ஏர் இந்தியா இப்போது ரூ. 67, 520 கோடி கடனில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 23, ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய மத்திய அரசுக்கு செயலாளர்கள் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதில் ரூ. 6,.600 கோடியை வரும் மார்ச் மாத இறுதிக்குள் மத்திய அரசு முதலீடு செய்யும் என்று தெரிகிறது. மேலும் 28 புதிய போயிங், 787 விமானங்களை வாங்கவும் ஏர் இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது. இதை வாங்க பணமில்லாததால் அதை வாங்கி வேறு லீசிங் நிறுவனத்திடம் விற்று விட்டு பின்னர் அவர்களிடம் இருந்தே விமானங்களை வாடகைக்கு எடுத்து இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக