திங்கள், ஜனவரி 09, 2012

ஜவுளிப் பூங்காக்களுக்கு மானியம்: முதல்வர் ஒப்புதல்


சென்னை, ஜன.9: ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் அனைத்து ஜவுளிப் பூங்காக்களுக்கும், திட்டத் தொகையில் 9 விழுக்காடு அளவுக்கு அதாவது 9 கோடி ரூபாய்க்கு மிகாமல் மானியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது நெசவுத் தொழில் ஆகும். கைத்தறி நெசவாளர்கள் தங்களது நெசவுத் தொழிலில், உயர் தொழில்நுட்பத்தை புகுத்தி மேம்பட்ட தரத்துடன் புதிய வடிவமைப்புகளுடன் தங்களது கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்திட, முதல்வர் ஜெயலலிதா  தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
கைத்தறி  நெசவாளர்கள் தொடர்ந்து வேலைவாய்ப்பு பெற்றிடவும், அதிக ஊதியம் பெற்றிடவும் ஏதுவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற அதே வேளையில், தமிழகத்தில் விசைத்தறி தொழில் மேம்படவும், அத்தொழிலை நம்பியுள்ள மக்கள் நலம் பெற்று வளமான வாழ்வு பெறவும், ஜெயலலிதா தலைமையிலான அரசு உரிய கவனம் செலுத்தி வருகிறது.
மேலும்,  ஜவுளித் துறையின் வளர்ச்சி மற்றும் ஜவுளிக் கூடங்களை நிறுவுவதற்கு ஏதுவாக, சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பொருட்டு, 2005-ஆம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் புதிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படுவதால், மாநிலத்தின் நெசவுத் தொழில் வளம் பெறும். உள்ளூர் தொழில் முனைவோர் அதிக அளவில் பங்குபெறுவதனாலும் மற்றும் அன்னிய நேரடி முதலீடு செய்யப்படுவதாலும், அதிக அளவு வேலை வாய்ப்பு ஏற்படும் என்பதால் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காத் திட்டத்தின் கீழ்  தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் அனைத்து ஜவுளிப் பூங்காக்களுக்கும், அவற்றின் திட்டத் தொகையில் 9 விழுக்காடு அளவிற்கு அதாவது 9 கோடி ரூபாய்க்கு மிகாமல் மானியம் வழங்க ஜெயலலிதா  ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும்,  இத்திட்டத்திற்கான நிதியினை விடுவிக்கவும், திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், கைத்தறி மற்றும் துணி நூல் இயக்குநரின் தலைமையில் மாநில அளவிலான ஒரு கண்காணிப்பு குழு அமைக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  
ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்களுக்கு மானியம் வழங்கப்படுவதால், ஜவுளித் தொழிலில் அதிக அளவில் முதலீடு பெறப்பட்டு, அதிக அளவு நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும். இதனால் நெசவாளர்களின் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும்.
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக