வெள்ளி, ஜனவரி 20, 2012

புதிய தலைமை செயலகத்தை ஆஸ்பத்திரியாக மாற்ற தமிழக அரசுக்கு ஐகோர்ட் தடை


சென்னை : புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் சென்னை ஒமந்தூரார் எஸ்டேட்டில் ரூ.1092 கோடியில் கட்டப்பட்ட புதிய தலை¬மைச் செயலகத்தை  சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்படும் என்று  முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த வக்கீல் வீரமணி, உயர்நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் பொதுநல மனு தாக்கல் செய்தார். 

மனுவை நீதிபதிகள் முருகேசன், கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்து, அரசு இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் முருகேசன், ஜனார்த்தன ராஜா ஆகியோர், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி பெற்றுள்ளதா என்பது குறித்தும்  அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கு நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நடந்த வாதம் வருமாறு: 

அட்வகேட் ஜெனரல்: மருத்துவமனையாக மாற்ற கட்டிடத்தின் உள்பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதற்கு மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என கருதுகிறோம்.
நீதிபதிகள்: எந்த சட்டப்பிரிவில் இப்படி கூறப்பட்டுள்ளது. 
அட்வகேட் ஜெனரல்: மருத்துவமனை செயல்பட துவங்குவதற்கு முன்பு அனுமதி வாங்கிவிடுவோம். அதுவரை மற்ற பணிகள் நடக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்
நீதிபதிகள்: நீங்கள் டெண்டர் விடுங்கள். அதற்கான தொகையையும் கொடுத்து விடுங்கள். ஆனால், மத்திய அரசு அனுமதி இல்லாமல் கட்டிடத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. 
வக்கீல் பி.வில்சன்:  மத்திய அரசின் அனுமதியில்லாமல் கட்டிடத்தை மாற்றி அமைக்க கூடாது என்று சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. 
அட்வகேட் ஜெனரல்: வரும் 24&ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம். அதற்குள் வானம் இடிந்து விழுந்துவிடாது. அரசு தரப்புக்கு எந்த வாய்ப்பும் தராமல் வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது. கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டிடத்திற்கு ஒப்புதல் பெற்றனர். ஆனால் கட்டிடத்தை பயன்படுத்த மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை. 
நீதிபதிகள்: நீங்கள் கூறியதையே நாங்கள் கூறுகிறோம். இப்போது இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் வானம் இடிந்து விழுந்துவிடாது. கடந்த ஆட்சியில் புதிய கட்டிடத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்தது. 
அட்வகேட் ஜெனரல்: கடந்த ஆட்சியில் மத்திய அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் கூட்டத்தொடரை சட்டவிரோதமாக நடத்தி விட்டனர். ஆனால் இந்த அரசு சட்டப்படி தான் செயல்படும். எனவே இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்துகிறேன். அரசு இதில் கொள்கை முடிவு எடுத்துள்ளது. 
நீதிபதிகள்: கட்டிடத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு அனுமதி தேவையா? இல்லையா? என்பது  தான் எங்கள் முன் எழுந்துள்ள ஒரே கேள்வி. இதுபற்றி தீர விசாரித்து தான் முடிவு எடுக்கவேண்டும்.
அட்வகேட் ஜெனரல்: கட்டிடத்தின் உள்கட்டமைப்பை மாற்ற மத்திய அரசு அனுமதி பெற தேவையில்லை. 
நீதிபதிகள்: இந்த கட்டிடம் மாற்றிய பிறகு மத்திய அரசு அனுமதி தராவிட்டால் கட்டிடத்தில் மாற்றிய பகுதிகள் இடிக்கப்படுமா? அப்படி இடித்தால் அரசு பணம் தான் வீணாகும். அரசு நலன் கருதியும், பொதுநலன் கருதியும் தான் நாங்கள் இதில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க  உள்ளோம்.
அட்வகேட் ஜெனரல்: கட்டிடத்திற்கு அனுமதி உள்ளது. உள்புற மாற்றத்திற்கு அனுமதி இல்லை. மருத்துவமனை செயல்படுவதற்கு முன்பு அனுமதி பெற்றுவிடுவோம். 
நீதிபதிகள்:  கட்டிடத்தை மாற்றிய பிறகு அனுமதி பெற்றுக்கொள்ள அனுமதித்தால் எல்லோரும் இதையே பின்பற்றிவிடுவார்கள். இது தவறான முன் உதாரணமாகிவிடும். 
அட்வகேட் ஜெனரல்: கட்டிடத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தற்போது கட்டிடத்தை மாற்றி அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
நீதிபதிகள்: பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளீர்களா?
அட்வகேட் ஜெனரல்: பத்திரிகைகளில் முறையாக விளம்பரம் செய்துள்ளோம். இதற்கான ஆதாரம் உள்ளது.  
நீதிபதிகள்: டெண்டர் நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம். அதற்கு தடை விதிக்க மாட்டோம். ஆனால் கட்டிடத்தை மாற்றி அமைக்க கூடாது. அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று அரசு தரப்பில் கூறியதை ஏற்க முடியாது. தற்போது சட்டம் எல்லாம் மாறிவிட்டது. வழக்கில் முகாந்திரம் இருந்தால் அரசு கொள்கை முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. கட்டிடத்தை மாற்றி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை என்று தெளிவாக தெரிகிறது. எனவே கட்டிடத்தை மாற்றி அமைக்க தடை விதிக்கிறோம். 

மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் கட்டிடத்தை தொடக்கூடாது. 15 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் உள்ள இடத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில்  மாறுதல் பணியை செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்று மனுதாரர் கூறியதை ஏற்றுக்கொள்கிறோம். வழக்கு விசாரணையை  பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். பிப்ரவரி 10ம் தேதி அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை கட்டிடத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. டெண்டர் விடுவது, மத்திய அரசின் அனுமதி பெற முயற்சிப்பது ஆகியவற்றை அரசின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம். இவ்வாறு நீதிமன்றத்தில் வாதம் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக