சனி, ஜனவரி 28, 2012

தானே புயல் நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்கள் விபரம்


தானே புயல் நிவாரண நிதி: முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கிய அமைச்சர்கள், பிரமுகர்கள் விபரம்: இதுவரை ரூ.52 கோடி குவிந்தது
 1/1 

சென்னை, ஜன.28 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், கடந்த 30.12.2011 அன்று தமிழகத்தை தாக்கிய தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் நிதிகளை வழங்கினர்.  தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன், தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின்தொடர் அமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக 8 கோடி ரூபாய் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சார்பாக 7 கோடி ரூபாய், என மொத்தம் 15 கோடி ரூபாயை வழங்கினார். 
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக 3 கோடியே 33 லட்சத்து 6 ஆயிரத்து 142 ரூபாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக 1 கோடியே 65 லட்சத்து 7 ஆயிரத்து 37 ரூபாய், என மொத்தம் 4 கோடியே 98 லட்சத்து 13 ஆயிரத்து 179 ரூபாயை வழங்கினார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  கூட்டுறவுத்துறை மற்றும் கூட்டுறவுத் துறை நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளமான 5 கோடியே 59 லட்சம் ரூபாயை வழங்கினார்.கோயம்புத்தூர் மாநகராட்சி ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் செ.ம. வேலுச்சாமியின் சொந்த பங்களிப்பான 5 லட்சம் ரூபாயுடன் சேர்த்து, மொத்தம் 27 லட்சத்து 44 ஆயிரத்து 733 ரூபாயை மேயர் வேலுச்சாமி வழங்கினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும் செட்டிநாடு குழுமத்தின் தலைவருமான எம்.ஏ.எம்.இராமசாமியின் சொந்த பங்களிப்பான 1 கோடி ரூபாயும் சேர்த்து மொத்தம் 2 கோடியே 8 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.
வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் ​ 10 லட்சம் ரூபாய், திரைப்பட நடிகர்  ரஜினிகாந்த் ​ 10 லட்சம் ரூபாயையும் வழங்கினர்.  தமிழக முதலமைச்சரிடம், தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 28 கோடியே 4 லட்சத்து 65 ஆயிரத்து 912 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று அளிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 52 கோடியே 41 லட்சத்து 89 ஆயிரத்து 451 ரூபாயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக