
அணுஉலை எதிர்ப்பார்ளர்கள் மீது நடந்த தாக்குதல் பேச்சுவார்த்தையை நிறுத்த நடந்த சதி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுவண் அரசு நியமித்த குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அணுஉலை எதிர்ப்பு குழுவினர் மீது நடந்துள்ள தாக்குதல் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு அணுஉலையை இயங்க செய்வதற்காக நடத்தப்பட்ட சதியாகவே கருதுவதாக சீமான் குறிப்பிட்டுள்ளார். நடுவண் குழுவினருடன் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த வருகின்றனர் என்பது தெரிந்தும், இந்து முன்னணியினர் ஆதரவு போராட்டத்திற்கு காவல்துறையினர் ஆதரவு அளித்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல் வெளியேறிய போராட்டக்குழுவினரின் முடிவு நியாயமானது என்று தெரிவித்துள்ள சீமான் அதையே காரணமாக்கி இதற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று நடுவண் குழு முடிவெடுத்திருப்பது மக்களின் அச்சத்தைப் போக்காமலேயே அணுஉலையை இயக்க முடிவெடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் சூழ்ச்சி என்றும் இதனை எதிர்த்து போராட வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் முதன்மையான கடமை என்றும் சீமான் தெரிவித்துள்ளார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக