வியாழன், ஏப்ரல் 05, 2012

ஜெனிவா தீர்மானத்தை செயல்படுத்தாவிட்டால் இலங்கை தனிமைப்படுத்தப்படும்: ஐ.தே.க. எச்சரிக்கை

கொழும்பு: இலங்கையில் இறுதிப் போரின் போது படையினரால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த தவறினால் ஜெனீவாவில் ஆதரித்த நாடுகளின் ஆதரவையும் இலங்கை அரசு இழக்க நேரிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது அவர் கூறியதாவது:

1988-89 ஆம் ஆண்டுகளில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பேசிய மகிந்த ராஜபக்ச, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நரகத்திற்கு செல்லவும் தயாராக இருப்பதாக கூறினார். அப்போது அவருக்கு நான்தான் ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தேன்.

தற்போது அதே ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.. இந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஓடினார். ஆனாலும் பலன் எதுவுமில்லை. இறுதியில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் 24 வாக்குகளுடன் நிறைவேறியது.

அதேநேரம் தீர்மானத்துக்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் 15 நாடுகள் வாக்களித்திருந்தன. இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளும்கூட இலங்கை அரசு அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு தான் கூறியிருக்கின்றன. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறினால் இந்த 15 நாடுகளின் ஆதரவையுமே இலங்கை இழந்துவிடும். இதனால் ஜெனிவா தீர்மானத்தைப் பின்பற்றி ஆணைக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றியாக வேண்டும். இல்லையெனில் நிச்சயமாக இலங்கை அரசு சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுவிடும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக