செவ்வாய், மே 22, 2012

முன்னாள் அமைச்சர் நேருவிடம் 1 மணி நேரம் விசாரணை


திருச்சி,மே.22 - திருச்சியில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் நேற்று திமுக முன்னாள் அமைச்சர் நேருவிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் நேரு நேற்று காலை 10.15 மணிக்கு திருச்சியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலிசார் அலுவகத்திற்கு சென்றார். அவரிடம் டி.எஸ்.பி(பொ)ரங்கராஜ் விசாரணை நடத்தினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை நடத்தியபோது சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த சோதனை நடந்தபோது நேரு நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனால் அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேருவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி நேற்று அவர் தனது வக்கீலுடன் சென்றார். விசாரணையின்போது, நேருவிடம், கட்சியில் என்னென்ன பொறுப்புகள் வகித்தீர்கள், இதுவரை 3 முறை அமைச்சராக இருந்தபோது என்னென்ன இலாகாக்களில் பொறுப்பு வகித்தீர்கள் என்பதையும், தற்போதைய சொத்து விவரங்களையும் கேட்டு பதிவு செய்து கொண்டனர். விசாரணை முடிந்து 11.15 மணிக்கு நேரு வெளியே வந்தபோது அவரிடம் விசாரணை விவரம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்று விட்டார். விசாரணை விவரம் குறித்து டி.எஸ்.பி ரங்கராஜனிடம் கேட்க அலுவலகத்திற்கு சென்றபோது, அவரும் பத்திரிக்கையாளர்களை பார்க்க மறுத்து விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக