சனி, மே 19, 2012

ஸ்டிரைக் சட்டவிரோதம் - பணிக்கு திரும்புங்கள் - அஜீத்சிங்


புதுடெல்லி. மே.- 20 - ஏர் இந்தியா பைலட்டுகளின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்றும் அவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அஜீத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஏர் இந்தியா பைலட்டுகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஏர் இந்தியாவின் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் கணிசமான அளவுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பைலட்டுகளின் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று டெல்லி ஐகோர்ட்டு ஏற்கனவே கூறியிருந்த போதிலும் கூட அதனை பொருட்படுத்தாமல் பைலட்டுகள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களின் இந்த ஸ்டிரைக் போராட்டம் சட்டவிரோதமானது என்றும் இவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலைமையை சமாளிக்க எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு பைலட்டுகள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அஜீத் சிங் கேட்டுக்கொண்டார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுதாரி சரண் சிங் விமான நிலையத்தில் புதிய டெர்மினலை துவக்கி வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு அஜீத் சிங் பேட்டியளித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில் - நீதிபதி தர்மாதிகாரி கமிட்டி அறிக்கை விரைவில் வர இருப்பதால் இவர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு அவசியமே இல்லை என்றும் கூறினார். பைலட்டுகளின் கோரிக்கைகள் குறித்து இக்கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை தர இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த கமிட்டியிந் அறிக்கை கிடைத்ததும் பைலட்டுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார். ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ. 30,000 கோடி நிதி உதவி செய்துள்ளது. ஆனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பணம் மட்டுமே பயன்படாது. ஏர் இந்தியா நிறுவனத்தை சிறப்பாக நடத்த விமானிகளின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார். பைலட்டுகளின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்று டெல்லி ஐகோர்ட்டு ஏற்கனவே கூறியுள்ளது. எனவே பைலட்டுகள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக