செவ்வாய், மே 22, 2012

தமிழகத்தில் மின்வெட்டு குறையும் சூழல்


சென்னை, மே.22 - காற்றாலை மின் உற்பத்தி 2 ஆயிரத்து 695 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு குறைய வாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் கடுமையாக மின்வெட்டு நிலவி வரும் வேளையில் கடந்த மாதம் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால், காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் 2 ஆயிரத்து 500 மெகா வாட்டுக்கும் அதிகமாக கிடைத்தது. இதனால், சென்னை உள்பட தமிழகத்தில் கிராமங்கள் வரை மின் வெட்டு நேரம் படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், கடந்த 2 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காற்றின் வேகம் மிகவும் மந்தமாக இருந்தது. இதையடுத்து காற்றாலை மின் உற்பத்தி 450 மெகாவாட்டாக குறைந்தது. இதற்கிடையே கடந்த 17ந்தேதி முதல் மீண்டும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 18ந் தேதியுடன் நிறைவடைந்த ஒரு நாளில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி 1,688 மெகா வாட்டாக இருந்தது. இது கடந்த 19ந் தேதி மாலை 6.55 மணியுடன் நிறைவடைந்த ஒரு நாளில் காற்றின் வேகம் மேலும் தீவிரம் அடைந்து, காற்றாலை மின் உற்பத்தி 2 ஆயிரத்து 695 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதே நேரத்தில், 54.265 மில்லியன் யூனிட் மின்சாரம் நுகர்வோர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கிராமங்களிலும் மின்வெட்டு நேரம் குறைய வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக