வியாழன், மே 10, 2012

ரூ.1420 கோடியில் 162 கி.மீ புதிய சாலை: முதல்வர் அறிவிப்பு



சென்னை, மே.10 - மாமல்லபுரத்தையும், எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்க சிங்கப்பெருமாள் கோயில் ஸ்ரீ பெரும்புதூர் - திருவள்ளூர், பெரியபாளையம் - காட்டுப்பள்ளி வரை ரூ.1420 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். 110 விதியின் கீழ் சட்டசபையில் அவர் வாசித்த அறிக்கை வருமாறு:-

வேளாண்மைத்துறையின் வேகமான வளர்ச்சியிலும், தொழில் துறையின் துரிதமான முன்னேற்றத்திலும், ஊரக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதிலும் சாலை கட்டமைப்பு வசதி இன்றியமையாததாக விளங்குவதால்தான், ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளில் சாலைக் கட்டமைப்பு வசதி முக்கிய பங்கினை வகிக்கிறது. சாலை கட்டமைப்பு வசதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த எனது தலைமையிலான அரசு, கிராமப்புறங்களுக்கு சிறந்த சாலை இணைப்பு வசதிகளை அளிப்பதிலும், மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரிப்பதிலும், ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதிலும், புதிய சாலைகளை அமைப்பதிலும், ஏற்கெனவே உள்ள சாலைகளை அகலப்படுத்துவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், பயண நேரம் மற்றும் வாகன இயக்கச் செலவினை குறைக்கும் வண்ணமும், புதிய பாலங்கள் அமைத்தல், வட்டச் சாலைகள் அமைத்தல், புறவழிச் சாலைகள் அமைத்தல் உட்பட பல்வேறு சாலைப் பணிகள் நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்படும். இதன்படி, கொள்ளிட ஆற்றின் குறுக்கே திருச்சி மாநகரத்தையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த பாலம் தற்போது மிகவும் பழுதடைந்துள்ளதால், அங்கு புதிய நான்கு வழி பாலம் அமைக்கும் பணியும், அணுகு சாலையில் அய்யன் வாய்க்கால் குறுக்கே ஒரு சிறு பாலம் அமைக்கும் பணியும், மற்றும் சாலை சந்திப்பு மேம்பாடு போன்ற பணிகளும் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

இதே போன்று, கரூர் மாவட்டத்தில் பசுபதி பாளையம் அருகில் கரூர்​வாங்கல் சாலையையும், நாகப்பட்டினம்​கூடலூர்​மைசூர் சாலையையும் இணைக்கும் தரைவழிப்பாலம் பழுதடைந்துள்ளதால், அங்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர் மட்ட பாலம் ஒன்று அமைக்கப்படும்.

மாமல்லபுரத்தையும், எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்கும் வகையில், 1420 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 162 கிலோ மீட்டர் nullநீளமுடைய புதிய வழித்தடம் சிங்கப்பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரிய பாளையம், புதுவயல், ஆகிய ஊர்களின் வழியாக காட்டுப்பள்ளி வரை சென்னை எல்லை சாலை பணிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இத் திட்டத்தின்படி 83.20 கிலோ மீட்டர் புதிய சாலைகள் அமைக்கப்படுவதுடன், ஏற்கெனவே உள்ள 78.60 கிலோ மீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும்.

மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருப்nullர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய நகரங்களுக்கு முதற்கட்டமாக வட்ட மற்றும் ஆரச்சாலைகள் அமைப்பதற்காக விரிவான திட்டம் தயாரிக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, நகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள மாநில நெடுஞ்சாலைகளுக்கு புறவழிச்சாலைகள் அமைப்பதற்கு விரிவான திட்டம் தயாரிக்கப்படும். மேலும், புதிதாக சாலைகள் அமைகிறபோது அல்லது மேம்படுத்த திட்டமிட்டும் போது, அந்தச் சாலையை சுற்றி அமைந்துள்ள பகுதிகள் வளர்ச்சியடையும் வகையில் சாலை கட்டமைப்பு வளையம், அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தத் திட்டம் சென்னை வெளிவட்டச் சாலை அமையும் பகுதியில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும். நெடுஞ்சாலைத் துறையில் என்னால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டங்களின் மூலம், தமிழகத்திலுள்ள சாலைப் போக்குவரத்து மேன்மை அடைவதுடன், நகர்பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசல்கள் தவிர்க்கப்பட்டு, பயணிகள் எந்தவித சிரமமுமின்றி தாங்கள் விரும்பிய இடத்திற்கு குறைந்த நேரத்தில் சென்றடைய வழிவகை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக