புதன், மே 23, 2012

ஆந்திர மாநில ரயில் விபத்தில் 25 பேர் பலி


ஐதராபாத், மே23 - ஆந்திர மாநிலத்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவத்தில் 25 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பெனுகுண்டா ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவம் நேற்று காலை 3.15 மணிக்கு நடந்தது. சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் வேகமாக மோதியதில் பயணிகள் ரயிலின் முதல் பெட்டியில் தீ பிடித்துக்கொண்டது. இதில் 11 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் மூன்றாவது பெட்டி தடம்புரண்டதில் அதில் சிக்கியிருந்த மேலும் 14 பேரும் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து இந்த கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பயணிகள் ரயிலின் முதல் 3 பெட்டிகளும் தடம்புரண்டன என்றும் இதில் 25 பேர் பலியானார்கள் என்றும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவர்களில் 3 பேர் பெண்கள், 2 பேர் குழந்தைகள் ஆவர். விபத்து நடந்த இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் சிக்னலை மீறி ஓட்டிச்சென்றதால்தான் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. என்றாலும் இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹூப்ளியில் இருந்து பெங்களூர் வந்த இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தவர்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள். இவர்களில் ஹூப்ளி மற்றும் ஹொசப்பேட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் இந்த ரயிலில் பயணித்துள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களால் தற்போது பேச முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர். விபத்து நடந்த பகுதியில் ரயில்வே மற்றும் மாநில போலீசார் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர். மோதிய வேகத்தில் பயணிகள் ரயிலின் முதல் பெட்டி தீப்பிடித்ததால் தீ அணைக்கும் படையினர் விரைந்து வந்து அந்த தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் முகுல்ராய் கொல்கத்தாவில் இருந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தார். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அமைச்சர் முகுல் ராய் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து நேரிட்ட பகுதியில் உள்ள தண்டவாளங்கள் சீர் செய்யப்பட்ட பிறகு நேற்று பிற்பகல் முதல் அந்த ரயில் வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக