வெள்ளி, மே 04, 2012

ஆப்கான், ஈரான், சீனா விவகாரம் குறித்து இந்திய பயணத்தில் ஹிலாரி விவாதிக்கிறார்..

டெல்லி: இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் தென்சீனக் கடல் விவகாரம் குறித்து விவாதிப்பார் எனத் தெரிகிறது. ஹிலாரியின் இந்திய பயணம் நாளை மறுநாள் தொடங்குகிறது. கொல்கத்தாவுக்கு வருகை தரும் ஹிலாரி, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்துப் பேசுகிறார். இச்சந்திப்பின் போது பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவன்ங்களை மேற்கு வங்கத்தில் அமைப்பது தொடர்பாக மமதாவுக்கு ஹிலாரி அழுத்தம் கொடுப்பார் எனக் கூறப்படுகிறது. பின்னர் மே 7-ந் தேதியன்று டெல்லியை வந்தடையும் ஹிலாரி 8-ந் தேதியன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ஆகியோரையும் ஹிலாரி சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது. இந்த பயணத்தின் போது ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் 2014-ம் ஆண்டு வெளியேறுவது பற்றியும் அந்நாட்டில் வன்முறையற்ற சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் கிருஷ்ணாவுடன் ஹிலாரி விவாதிக்கக் கூடும். மேலும் ஈரானின் அணு ஆயுத விவகாரம் தொடர்பாகவும் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்துவது குறித்தும் ஹிலாரி வலியுறுத்தவும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீன பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு ஹிலாரி வருவதால் நிச்சயம் தென்சீனக் கடல் விவகாரமும் இந்த ஆலோசனையில் இடம்பெறக் கூடும் எனத் தெரிகிறது. தென்சீனக் கடலில் சீனா ஒருபுறமும் இந்திய, அமெரிக்கா ஒருபுறமும் நின்று கொண்டு பதற்றத்தை உருவாக்கி வரும் நிலையில் தென்சீனக் கடல் பற்றிய எதிர்கால நடவடிக்கைகளை ஹிலாரி கிருஷ்ணாவுடன் ஆலோசிப்பார் என்கின்றன டெல்லி அரசியல் வட்டாரங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக