வியாழன், நவம்பர் 08, 2012

இன்டிகோ விமானத்தில் பயங்கரம்... விமான ஊழியரைத் தாக்கி ரகளை செய்த பயணியால் பீதி


டெல்லி: மும்பை-டெல்லி இடையிலான இன்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் வன்முறையில் இறங்கியதால் பெரும் பீதி ஏற்பட்டு விட்டது. புதன்கிழமையன்று, மும்பையிலிருந்து டெல்லிக்கு இந்த விமானம் அதிகாலை 3.15 மணிக்குக் கிளம்பியது. விமானம் வானில் பறக்க ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆன நிலையி்ல 40 வயதான முர்சலின் ஷேக் என்ற திடீரென முரட்டுத்தனமாக நடக்க ஆரம்பித்தார். அனைவரையும் மிரட்டும் வகையில் அவர் பேசினார். இதையடுத்து விரைந்து வந்த விமான ஊழியர்கள் அவரை அமைதிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்களை மீறி நடந்த அவர் காக்பிட்டுக்குள் நுழைய முயற்சித்தார். மேலும், காக்பிட் கதவை உடைக்கவும் முயன்றார். அதைத் தடுக்க முயன்ற விமான ஊழியர்களையும் அவர் தாக்கினார். ஒரு ஏர் ஹோஸ்டஸ் கன்னத்தில் பளார் என அறைந்தார். மேலும் விமானத்தை தகர்த்து விடுவேன் என்றும் அவர் மிரட்டினார். இதையடுத்து பயணிகள் சிலர் எழுந்து வந்து விமான ஊழியர்களுடன் இணைந்து அந்த பயணியை தடுத்து நிறுத்தி அமர வைத்தனர். அந்த பயணி டென்ஷனில் இருந்ததாக சக பயணிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் ஆயுதம் எதையும் வைத்திருந்ததாக தெரியவில்லை. இந்த சண்டைக்காட்சியை ஒரு பயணி தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார். அதில் அந்த முரட்டுப் பயணி, விமான ஊழியர்களுடன் ஆக்ரோஷமாக மோதுவது பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை இன்டிகோ நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக காத்திருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் முரட்டுத்தனமாக நடந்த பயணியைக் கைது செய்து கொண்டு சென்றனர். அவர் மீது பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது, கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டது ஆகிய வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஷேக் மும்பையைச் சேர்ந்தவர். அவரை டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக