ஞாயிறு, டிசம்பர் 23, 2012

டெல்லியில் இரண்டாவது நாளாக பதற்றம் தொடர்கிறது

டெல்லி இந்தியா கேட் பகுதியில் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நேற்று காலை முதல் இரவு வரை பல முறை போலிஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், போராட்ட காரர்களை கலைக்க முயற்சித்து வருகின்றனர். பதற்றத்தை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை கடும் குளிரையும் பொருட்படுத்தாது மீண்டும் இந்தியா கேட் முன்பாக ஆயிரக்கணக்கானோர் கூடி ராஷ்டிரபதிபவனை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தண்ணீர் பீய்ச்சி தாக்குதல் நடத்தப்பட்டன. இந்நிலையில் நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தரிலும் ராம்லீலா மைதானத்திலும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றனர். பாபா ராம்தேவும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் போராட்ட காரர்கள் குழுவினரை சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இதேவேளை, ஆர்ப்பாட்டட்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் மீது தடியடி நடத்தும் போலீஸாரை கட்டுப்படுத்தும் படி, பாஜக மூத்த தலைவர் அத்வானி தொலைபேசி மூலமாக, உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த டெல்லி மாணவி, தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக